தமிழ்நாடு

போக்சோ வழக்கு.. கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

By VASUKI
15 Apr 2025, 09:42 PM
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்தவ மத பாடல்கள் மூலம் சமூகவலைதளத்தில் மிகவும் பிரபலமான மதபோதகராக இருப்பவர் ஜான் ஜெபராஜ். இவர் கோவையில் கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடம் என்ற அமைப்பை நிறுவி அதில் மதபோதகராகவும் செயல்பட்டு வருகிறார்.

கடந்த 2024 ம் ஆண்டு மே 21ம் தேதி மத போதகர் ஜான் ஜெபராஜ், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில், 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜான் ஜெபராஜ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை தரப்பில், தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜ் கடந்த 13ம் தேதி கேரள மாநிலம் மூணாறில் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, முன் ஜாமீன் கோரிய ஜான் ஜெயராஜனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.