தமிழ்நாடு

ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம்

By nagalekshmi
06 Apr 2025, 02:46 PM
பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்- ராமேஸ்வரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதியில் கடந்த 1914-ம் ஆண்டு 2.2 கி.மீ தூரத்திற்கு ரயில் பாலம் அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் 106 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் உறுதித்தன்மை குறைந்ததால் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி 2024-ஆம் ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 6) பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்தார்.

பிரதமர் மோடி வருகை

முன்னதாக இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் மண்டபத்திற்கு வருகை தந்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் அமைந்துள்ள மேடைக்கு வந்தார். அங்கு பிரதமருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து பாம்பனில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்த பிரதமர் மோடி, ராமேஸ்வரம்- தாம்பரம் ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பிரதமர் மோடி ரயில் பாலத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து பாம்பன் புதிய பாலத்தில் ரயில் இயக்கப்பட்டது. முன்னதாக பிரதமர் மோடிக்கு கம்பராமாயணம் புத்தகத்தை வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார். இதேபோல் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜக தலைவர்கள், ரயில்வே உயர் அதிகாரிகள் உட்பட பலர் பிரதர் மோடியை வரவேற்றனர்.

சாமி தரிசனம்

பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். இவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.