Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

பிரதமர் மோடி பாம்பன் வருகை... ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு

By Jayakumar
05 Apr 2025, 11:23 AM
பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வருகை தர உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்- ராமேஸ்வரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதியில் கடந்த 1914ம் ஆண்டு 2.2 கி.மீ தூரத்திற்கு ரயில் பாலம் அமைக்கப்பட்டது.

புதிய ரயில் பாலம்

இந்தப் பாலம் 106 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் உறுதித்தன்மை குறைந்ததால் ரூ.550 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி 2024 இறுதியில் நிறைவடைந்தது.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் தேதிக்காக திறப்பு விழா தள்ளிப்போன நிலையில், நாளை ( ஏப்.6ம் தேதி) பிரதமர் மோடியால் பாம்பன் புதிய பாலம் திறந்துவைக்கப்பட உள்ளது.


பிரதமர் மோடி வருகை

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் மண்டபத்திற்கு நாளை காலை 11.50 மணியளவில் வருகை தர உள்ளார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் அமைந்துள்ள மேடைக்கு சென்று புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.

அப்போது ராமேஸ்வரம்- தாம்பரம் ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தபின், ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்ல உள்ளார். இதைத்தொடர்ந்து ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு தங்கும் விடுதி வளாகத்தில் பாம்பன் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். இதையடுத்து, மதியம் 2 மணி அளவில் மண்டபத்தில் இருந்து மதுரைக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவில் பிரதமரின் வருகையை முன்னிட்டு, ராமேஸ்வரம் முதல் மண்டபம் வரை சுமார் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

பலத்த பாதுகாப்பு

பிரதமரின் வருகையையொட்டி, ராமேஸ்வரம்,பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏப்.4 முதல் 6 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையையொட்டி, ராமேஸ்வரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.