தமிழகப் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளைப் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பி. சந்தரமோகன் இன்று வெளியிட்டார். தமிழகத்தில் இன்னும் புதிய அரசு பொறுப்பேற்காத நிலையில், அதிகாரிகள் மட்டத்தில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தேர்வு எழுதிய 8.27 லட்சம் மாணவர்களில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட (93.19%), மாணவிகளே (97%) அதிக அளவில் தேர்ச்சி பெற்று முத்திரை பதித்துள்ளனர்.
மாவட்ட வாரியான தேர்ச்சி விவரம்
மாநில அளவில் 98.87 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிவகங்கை (98.05%) இரண்டாம் இடத்தையும், கன்னியாகுமரி (97.63%) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மே 13-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும், தோல்வியடைந்த மாணவர்களுக்கு விரைவில் மறுதேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முடிவுகளை அறியப் புதிய வசதிகள்
மாணவர்கள் தங்கள் முடிவுகளை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும், இந்த ஆண்டு முதல் முறையாக வாட்ஸ்ஆப் (WhatsApp) மூலம் முடிவுகளை அறியும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 78452 52525 என்ற எண்ணிற்கு 'Hi' என அனுப்பி, தேர்வெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவிட்டு எளிதாகத் தேர்வு முடிவுகளைப் பெறலாம். இது தவிர, மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களுக்கும் குறுஞ்செய்தி வழியாக முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.