Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

"அற்ப அரசியலைக் கைவிட வேண்டும்"- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

By Christon
31 Oct 2025, 10:14 AM
பிரதமர் மோடியின் பேச்சிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பீகாரில் தேர்தல் பிரசாரத்தின்போது, "தமிழ்நாட்டில் தி.மு.க.வினர் பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்களைத் துன்புறுத்துகின்றனர்" என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

'மாண்பை இழந்துவிடக் கூடாது'

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

'முதல்வர் கண்டனம்'

ஒடிசா - பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதல்வர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அற்ப அரசியலைக் கைவிட வலியுறுத்தல்

"பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.வினரும் கவனம் செலுத்த வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.