தமிழகத்தில் உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்கள் (ரெஸ்டோ பார்கள்) கொண்டு வரப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களைப் போலத் தமிழகத்திலும் உணவகத்துடன் கூடிய நவீன மதுக்கூடங்களான 'ரெஸ்டோ பார்களை' அனுமதிக்க டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலித்து வருவதாகச் செய்திகள் பரவின. அரசின் வருவாயைப் பெருக்குவதற்காக இந்த வகை மதுபானக் கூடங்களுக்கு அனுமதி வழங்கி, அதற்குச் சிறப்பு வரி விதிக்கத் திட்டமிடப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெறுவதாகவும் கூறப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழகத்தில் உணவகத்துடன் கூடிய மதுபானக்கூடம் (ரெஸ்டோ - பார்) திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. துறையைச் சீரமைப்பது தொடர்பாகப் பல்வேறு கட்ட ஆலோசனைகளும் விவாதங்களும் வழக்கமாக மேற்கொள்ளப்படலாம். ஆனால், இந்தத் திட்டம் தொடர்பாக அதிகாரப்பூர்வ முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.