Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

செல்போன் வாங்கி தர மறுத்த பெற்றோர்.. 11 ஆம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு

By Jayakumar
13 Jun 2025, 09:29 AM
செல்போன் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால், 11 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, தொண்டாமுத்தூர் உலிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி செல்வராஜ் - சுஜாதா. இவர்களது மகன் ராகுல் (வயது 15) தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், இவருடன் படிக்கும் நண்பர்கள் சிலர் செல்போன் வைத்து இருந்ததால் தனக்கும் செல்போன் வேண்டும் என வீட்டில் அடம் பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பெற்றோர் செல்போன் வாங்கித் தர மறுத்ததால், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டி அவரது தாயின் புடவையால் தூக்கிட்டு தற்கொலைக்கு செய்துகொண்டார்.

இதனைக் கண்ட அதிர்ச்சியடைந்த அவரது தாய் சுஜாதா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகன் ராகுலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ராகுலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து ராகுலின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து, ராகுலின் தந்தை செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனுக்காக 11 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொண்டாமுத்தூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாதாரண பிரச்சனைகளுக்கே தற்கொலை செய்துகொள்கிறார்கள். எல்லா பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்).