Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

15,000 ரூபாய் கடன்.. குழந்தையை அடகு வைத்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

By MUTHUKRISHNAN
21 May 2025, 08:13 PM
ஆந்திர மாநிலத்தை சார்ந்த தம்பதியினர் தாங்கள் வாங்கிய 15,000 ரூபாய் கடனுக்காக பெற்ற குழந்தையினை அடகு வைத்த நிலையில், காஞ்சிபுரம் பாலாற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கூடூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் ஏனாதி-அங்கம்மாள் தம்பதியினர். இவர்கள் ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை சேர்ந்த முத்து-தனபாக்கியம் தம்பதியினரிடம் கடனாக 15,000 ரூபாய் பெற்றிருக்கின்றனர்.

இத்தம்பதியிடம் வாங்கிய கடனுக்கு குத்தகையாக தனது 9 வயது குழந்தையினை இவர்களுடன் 10 மாதங்கள் வாத்து மேய்க்க அனுப்பியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் முத்து-தனபாக்கியம் தம்பதியினர் காஞ்சிபுரத்தை அடுத்துள்ள வெண்பாக்கம் பகுதியில்‌ தங்கியிருந்து வாத்து மேய்த்து வந்துள்ளனர்.

இதனிடையே கடந்த 30 நாட்களுக்கு முன்பே குத்தகையாக பெறப்பட்ட சிறுவனுக்கு மஞ்சள் காமாலை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் வெண்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமைன ஒன்றில் சிகிச்சைக்காக சிறுவனை அனுமதித்துள்ளனர். சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தாக சொல்லப்படுகிறது. உயிரிழந்த சிறுவன் மாற்று சமுதாயம் என்பதால் ஏதேனும் பிரச்சனையாக கூடும் என எண்ணி காஞ்சிபுரம் பாலாற்றில் முத்து மற்றும் அவரது மனைவி தனபாக்கியம் இவர்களது மகன் ராஜசேகர் ஆகியோர் ஒன்றாக குழி தோண்டி சிறுவனை புதைத்தாக சொல்லப்படுகிறது.

பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி:

குத்தகை காலமான 10 மாதங்கள் முடிவுற உள்ள நிலையில் குழந்தை குறித்து பெற்றோர் விசாரிக்க குழந்தை குறித்து எவ்வித தகவலையும் முத்துவும்-தனபாக்கியமும் பகிரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுவனின் பெற்றோர் ஆந்திர மாநிலம் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் முத்து,தனபாக்கியம்,ராஜசேகர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டது காவல்துறை.

அப்போது குழந்தை உடல்நலம் சரியில்லாமல் உயிரிழந்ததும், யாருக்கும் தெரியாமல் காஞ்சிபுரம் பாலாற்றில் புதைக்கப்பட்டது குறித்தும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முத்து தனபாக்கியம் அவர்களது மகன் ராஜசேகர் ஆகிய மூவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் சத்தியவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஆந்திரா மாநிலம் புத்தூர் டிஎஸ்பி ரவிகுமார் தலைமையிலான போலீசார், காஞ்சிபுரம் தாலுகா காவல்நிலைய போலீசாரின் உதவியுடன் புதைக்கப்பட்ட சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.குத்தகைக்கு விடப்பட்ட சிறுவன், காஞ்சிபுரம் பாலாற்றில் புதைக்கப்பட்டுள்ள சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.