சென்னையை அடுத்த பல்லாவரம் கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் (41). சென்னை மாநகராட்சி மண்டலம் 12-ல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்தார். மாதம் சுமார் ரூ.20 ஆயிரம் ஊதியம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. குடும்பச் செலவுகள், குழந்தைகளின் கல்வி, வாகனக் கடன் உள்ளிட்ட காரணங்களால் பலரிடம் கடன் வாங்கியிருந்ததாகவும், நீண்ட காலமாக பணியாற்றியும் தனது பணி நிரந்தரம் செய்யப்படாதது குறித்து மனவேதனையில் இருந்ததாகவும் அவரது குடும்பத்தினரும், சக ஊழியர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சாமுவேல் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டார். தகவலறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், சாமுவேல் உயிரிழப்பதற்கு முன்பு பதிவு செய்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், பல ஆண்டுகளாக மாநகராட்சியில் பணியாற்றியும் பணி நிரந்தரம் செய்யப்படாதது, அதிகரித்த கடன் சுமை மற்றும் கடன் வழங்கியவர்களின் நெருக்கடி காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்ததாக அவர் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தனது குடும்பத்தினருக்கு எந்தவிதமான தொந்தரவும் அளிக்க வேண்டாம் என்றும், தனது மனைவி மற்றும் குழந்தைகளை யாரும் அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருப்பதாக அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் மாநகராட்சி தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம், ஊதிய நிலை மற்றும் நலன்கள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.