பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தொடர்புடைய சார்பதிவாளர், புரோக்கர் உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிசிஐடி அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பழனி அடிவாரம் பூங்கா ரோட்டில் உள்ள தண்டபாணி சுவாமி மடத்தின் அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம், நீதிமன்ற உத்தரவின்படி பழனி முருகன் கோவில் நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்ட இந்த ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், அண்மையில் ஜூலை 6-ஆம் தேதி இருவருக்கு வெறும் ரூ.2 கோடிக்குத் தனிநபர் பெயரில் முறைகேடாகக் கிரையப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பழனி நிலை-1 சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர், இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, சிபிசிஐடி மாவட்ட கண்காணிப்பாளர் சஜிதா தலைமையிலான காவல்துறையினர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை முதலே அதிரடிச் சோதனையைத் தொடங்கினர்.
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனின் திண்டுக்கல் ரவுண்ட் ரோடு வீட்டில் அதிகாலை 4:00 மணி முதல் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல், இந்த மோசடியில் நிலப் பத்திரம் தயார் செய்து கொடுத்தவரான, ஜஸ்டின் மணிகண்டனின் நெருங்கிய நண்பரும் நில புரோக்கருமான ஜெயப்பிரகாஷ் என்பவரின் ஒட்டன்சத்திரம் வீட்டிலும் சிபிசிஐடி ஆய்வாளர் சேகர் தலைமையிலான போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதுதவிர, இந்த நிலத்தைக் கிரையம் பெற்றவர்களில் ஒருவரான மடத்துக்குளம் பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளைத்துரை வீடு மற்றும் நெல்லையில் அலங்காரப் பணி செய்யும் சண்முகசுந்தரம் என்பவரது வீடுகளிலும் சிபிசிஐடி போலீசார் தங்களது சோதனையையும் விசாரணையையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.