Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ராட்வீலர் நாயை ஏவிவிட்ட உரிமையாளர்.. நிர்வாணமாக ஓடிய முதியவர்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..!

By VASUKI
02 Apr 2025, 08:08 PM
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த ஆண்டு மே மாதம் மாநகராட்சி பூங்காவில் 5 வயது சிறுமியை 2 ராட்வீலர் நாய் கடித்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாங்காடு பகுதியிலும் 11 வயது சிறுவன் ராட்வீலர் நாய் கடியால் பாதிக்கப்பட்டார்.

தமிழக அரசு ராட்வீலர் உள்ளிட்ட 23 வெளிநாட்டு வகை நாய்களுக்கு தடை விதித்தது. குறிப்பாக மத்திய அரசின் தடையை அடிப்படையாக வைத்து தமிழக அரசும் அந்த தடையை விதித்தது. இருப்பினும் உயர்நீதிமன்றங்களில் 23 வெளிநாட்டு ரக நாய்கள் மீதான மத்திய அரசின்  உத்தரவுக்கு நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்ட காரணத்தினால் தமிழக அரசு வாபஸ் பெற்றது.

இந்த நிலையில் தான், சென்னை மாநகராட்சி இதுபோன்று வெளிநாட்டு நாய்கள் உள்ளிட்ட வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. குறிப்பாக மாநகராட்சி பூங்காக்களில் நாய்களை அழைத்து வருவது தொடர்பாகவும், வெளியில் நாய்களை நடைப்பயிற்சிக்காக அழைத்து வரும்போது வாயைக் கட்டி அழைத்து வரவேண்டும் எனவும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. சென்னை மாநகராட்சி இதற்காக உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் இந்த கட்டுப்பாட்டில் குறிப்பிட்டிருந்தது. 

ஆனால் மாநகராட்சியின் விதிகளை மீறி தொடர்ந்து பல நாள் உரிமையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக குளத்தூர் புத்தாகரம் பகுதியில் ராட்வீலர் நாயை ஏவி விட்டு வயதான தம்பதியினரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாய் விவகாரம் தொடர்பாக 75 வயதான  தம்பதியினரான மாரியப்பன் மற்றும் அவரது மனைவி, நாய் உரிமையாளரிடம் முறையிட்ட போது ராட்வீலர் நாயை விட்டு கடிக்க விட்டுள்ளார். குறிப்பாக வயதான மூதாட்டி மீது ஏறி நின்று தொடர்ந்து நாய் கடிக்க முயன்றுள்ளது . வயதான மாரியப்பன் துணியையும் கடித்து இழுத்து நிர்வாணமாக்கி அவரை துரத்தி உள்ளது. அச்சத்தில் பயந்து ஓடும் வயதான தம்பதியினரை பாவம் கூட பார்க்காமல் நாய் கடித்துக் குதறி தாக்கிய போதும் நாயின் உரிமையாளர் வேடிக்கை பார்த்து தொடர்ந்து ஏவி விட்டுள்ளார். 

இதை தட்டிக்கேட்ட அக்கம் பக்கத்தினரையும் நாயை விட்டு கடிக்க விட்டுள்ளார். அப்பகுதியில் உள்ள பெண்களையும் நாய் துரத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்றுக்கூடி கேட்ட போதும் நாயை விட்டு மிரட்டிய உரிமையாளர் தனக்கு காவல்துறை உயர்அதிகாரியையும் வழக்கறிஞர்களையும் தெரியும் எனக் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட ரமேஷ் என்பவர், இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நாய் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கொளத்தூரில் ராட்வீலர் நாயை ஏவி வயதான தம்பதியினர் கடித்து துரத்திய இந்த சம்பவத்தில் போலீசார் இரண்டு பிரிவுகளின் நாய் உரிமையாளர் கவியரசன் என்பவர் மீது புழல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், நாய்களை ஏவிவிட்டு உரிமையாளர்கள் செய்யும் அட்டூழியங்களை ஒடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.