Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

இனி தமிழ் மொழியில் மட்டுமே அரசாணை- தமிழக அரசு அதிரடி உத்தரவு!

By MUTHUKRISHNAN
16 Apr 2025, 09:52 AM
தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசு இருமொழிக் கொள்கையினை பின்பற்றுவதில் உறுதியாக நிற்கிறது என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ்மொழியை பயன்படுத்தவும் அனைத்துத் துறை தலைமைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியருக்கு உரிய அறிவுறுத்தல்களை தமிழக அரசு வழங்கியுள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-

அரசாணைகள் தமிழில் மட்டுமே வெளியிடப்படல் வேண்டும். சுற்றாணைக் குறிப்புகள் தமிழிலேயே இருக்கவேண்டும். துறைத் தலைமை அலுவலகங்களிலிருந்து அரசு மற்றும் பிற அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் கருத்துரைகள் தமிழிலேயே இருக்க வேண்டும். வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள் மற்றும் இதர கடிதம் போக்குவரத்துகள் ஆகியவை விலக்களிக்கப்பட்ட இனங்கள் தவிர எல்லா இனங்களிலும் தமிழில் தாள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களிடமிருந்து தமிழில் வருகின்ற கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் எழுதுவதுமில்லாமல் அவை பற்றிய குறிப்புகள் யாவும் தமிழிலேயே இருக்க வேண்டும். அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும்.

மேலும் ஆங்கிலத்தில் வெளியிட விலக்களிக்கப்பட்டுள்ள இனங்களுக்கு நேர்வுக்கேற்ப தலைமைச்செயலகத் துறைகளால் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் அரசாணைகளை தமிழில் வெளியிடுவதற்கு ஏதுவாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவு மூலம் தமிழாக்கம் செய்வதற்கு அனுப்பிவைக்கவும் அல்லது அந்தந்த துறைகளாலேயே தமிழில் மொழிபெயர்க்கப்படும் அரசாணைகளை தேவைப்படின் கூர்ந்தாய்வு செய்யும் பொருட்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் மொழிபெயர்ப்பு பிரிவுக்கு அனுப்பிவைக்குமாறும் அரசு துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read more: நயினாருக்கு வாழ்த்து சொன்ன முதல்வர்...அமைச்சரின் பதிலால் சிரிப்பலை