Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ஊட்டி மலை ரயில் போக்குவரத்து தொடக்கம்! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

By nishika
07 Aug 2024, 02:37 PM
உதகையில் கன மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக கடந்த 6 நாட்களாக தடை பட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மலைரயிலில் பயணித்தபடி நீலகிரி மலையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 1 ம் தேதி அதிகாலை பெய்த கனமழை காரணமாக ஹில்குரோ - அடர்லி ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாள பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் கடந்த 1 ம் தேதி மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து சுற்றுலா பயணிகளோடு புறப்பட்ட மலை ரயில் மலையடிவார பகுதியான கல்லார் ரயில் நிலையம் வரை சென்று விட்டு மேற்கொண்டு பயணிக்க இயலாமல் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கே கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அதிலிருந்த பயணிகள் வேறு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதனையடுத்து, மண்சரிவு சீரமைப்பு பணிகள் நடைபெற வேண்டி உள்ளதால்  கடந்த 1 ம் தேதி முதல் நேற்று 6 ம் தேதி  வரை 6 நாட்கள் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று மாலை சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்தது. இதன் காரணமாக இன்று (ஆகஸ்ட் 7) காலை 7.10 மணிக்கு வழக்கம் போல்  மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி செல்லும் மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. 

இதனால் உலக பாரம்பரிய சின்னமான மலைரயிலில் பயணிக்க ஏற்கனவே முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் மலை ரயிலில் பயணித்தனர்.

ஊட்டி ரயில் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்: 

யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த ஊட்டி ரயில் இந்தியாவிலேயே மிக மெதுவான ரயில் ஆகும். இதுமட்டுமில்லாமல் இந்தியாவில் ஓடும் ஒரு சில நீராவி என்ஜின் ரயில்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஊட்டி ரயிலில் பயணித்தால் நிறைய அற்புதமான விஷயங்களை பார்த்தபடி பயணிக்க முடியும். இந்த ரயில் செல்லும் பாதையில் 200க்கும் மேற்பட்ட பாலங்கள், 100க்கும் மேற்பட்ட வளைவுகள், குகைகள் என எல்லாவற்றையும் கடந்து போவதாக இருக்கும்.

மேலும் படிக்க: கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள்.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

மற்ற ரயில்கள் போல் இல்லாமல் ஊட்டி மலை ரயிலில் 3 தண்டவாளம் இருக்கும். அதாவது நடுவில் பல்லு சக்கரம் போன்ற அமைப்பு தண்டவாளம் முழுவதும் இருக்கும். ஏனெனில் ரயில் மேலே ஏறும் போது தவறிக்கூட கீழே வந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படி அமைக்கப்பட்டுள்ளது. இது இந்த ரயிலின் முக்கிய சிறப்பம்சமாகும்.