Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கோலடி திட்டத்தை மாற்றம் செய்ய முதலமைச்சரால் மட்டுமே முடியும் - திருமாவளவன்

By VASUKI
30 May 2025, 06:59 PM
திருவேற்காடு கோளடி கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் திட்டத்தை மாற்றம் செய்வதற்காக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து இடமாற்றம் செய்யப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை திருவேற்காடு கோலடி பகுதியில் கழிவுநீர் சேகரிப்பு மையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று கழிவு நீர் மையம் அமைக்கப்பட உள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்தார். அத்துடன் அப்பகுதி மக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர், மக்கள் மத்தியில் உரையாற்றிய திருமாவளவன், "கோலடி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைவது தொடர்பாக அமைச்சர் நாசர் உடன் ஆலோசனை செய்தேன். இந்த திட்டம் 4 ஆண்டுகளுக்கு முன்னரே அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு உலக வங்கியால் ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டு தொடங்கப்பட்ட திட்டமாகும்.

எனக்கு இந்த திட்டத்தை அதிகாரிகளாலோ, அமைச்சராலோ தடுக்க முடியாது. முதலமைச்சர் மட்டுமே இந்த திட்டத்தை நிறுத்தவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ முடியும். எனவே முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை அடுத்த ஓரிரு நாட்களுக்குள் நேரில் சந்தித்து, இந்த பிரச்சனை குறித்து பேசுவேன். இந்த திட்டத்தை ஏரிக்கரை அல்லது வேறு ஏதேனும் பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.