Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது - கீ. வீரமணி

By VASUKI
31 May 2025, 05:30 PM
பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய அரசு எடுத்த சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது என்று திராவிட கழக தலைவர் கீ. வீரமணி தெரிவித்துள்ளார்.


வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி பங்கேற்று கருத்தரங்கை துவக்கி வைத்தார் பின்னர் தந்தை பெரியாரின் கருத்துக்கள் அடங்கிய நூல்களையும் வெளியிட்ட அவர், நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகம் கல்வி மற்றும் மருத்துவத்தில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக நிகழ்ந்து வருகிறது. இதுபோன்று, அனைத்து துறைகளிலும் தமிழக அரசு சிறந்து விளங்கி வருகிறது.

திமுக ஆட்சியில் ஞானசேகரன் வழக்கில் துரிதமாக செயல்பட்டுள்ளது விரைவாக தீர்ப்பு வரக்கூடிய அளவிற்கு இந்த ஆட்சியில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் வழக்குகளை பதிவு செய்யவில்லை. வழக்குகள் பதிவு செய்தால் தானே குற்றங்கள் வெளியில் வரும் மக்களுக்கு தெரியும் எது உண்மை எது பொய் என்று கூறினார்.

ஞானசேகரின் வழக்கில் நீதிமன்றம் தானே நடவடிக்கை எடுத்தது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், எல்லா வழக்குகளுமே, நீதிமன்றங்கள் தான் கடைசியில் தீர்ப்பு வழங்கும். ஆட்சியில் இருக்கும் அரசு வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் விசாரணை அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதுதான் ஒரு அரசாங்கத்தின் அங்கமாக திகழ்ந்து வருகிறது. முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

மத்திய அரசு எடுத்த சிந்தூர் நடவடிக்கை குறித்த கேள்விக்கு, நாட்டில் யாருக்கும் இந்த சம்பவத்தில் கருத்து வேறுபாடு இல்லை நாட்டின் சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும் என்ற போது அதில் ஒன்றாகத்தான் இருப்போம். இதற்கு முன்பு ஏற்பட்ட பாகிஸ்தான் போரின் போதும், சீனா ஆக்கிரமிப்பு செய்த நேரத்திலும் கட்சி, மதம் இல்லை பேதம் இல்லை அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டோம். நாட்டிற்கு நெருக்கடி என்று வரும் பொழுது சுயமரியாதைக்காரர்கள் எல்லாரும் முதல் ஆதரவு கரம் நீட்டுவோம் என கூறினார்.