வளர்ந்த தமிழகத்தின் தலைநகரை அனுதினமும் மிளிர செய்துகொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது முந்தைய ஆட்சியைப்போல த.வெ.க. அரசும் அலட்சியம் காட்டிவருவதால் தெருவில் இறங்கி மீண்டும் போராடி வருகிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த தி.மு.க. ஆட்சியில் பல்வேறு கட்டங்களாக சென்னை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை கடந்த 2025, ஆகஸ்ட் 11 அன்று பனையூருக்கு அழைத்துப் பேசிய தவெக தலைவர் விஜய், அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததோடு 'தவெசு ஆட்சிக்கு வந்தால் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.
ஆனால் ஆட்சி அமைந்து 100 நாட்களை கடந்துவிட்ட நிலையிலும் அந்த வார்த்தைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, 'உழைப்போர் உரிமை இயக்கம்' சார்பில் அதே பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி. சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு கடந்த ஒரு வாரமாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள். 'முதல்வரே எங்களது குரலை கேளுங்கள்... தூய்மைப் பணியாளர்களை சந்தியுங்கள்' என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களில் சிலரிடம் பேசினோம் "சிம் விஜய் ஜப்பான், சீனான்னு வெளிநாட்டுக்காரங்களை எல்லாம் சந்திக்கிறார். ஆனா, தமிழ் பூர்வக்குடி மக்களான எங்களை சந்திக்க மறுக்கிறார். ரிப்பன் மாளிகையில போராட விடாம எங்களை போலீஸ் துரத்துறாங்க நாளப்பின்ன இங்க நாங்கதான் வந்து சுத்தம் பண்ணணும் பார்த்துக்கோங்க. நாங்க ஒண்ணும் வேலை செய்யாம வந்து போராடல். வேலையை முடிச்சிட்டுதான் வந்து உக்காந்திருக்கோம். அஞ்சு வருஷத்துக்கு மேல வேலை பார்த்தா பர்மனென்ட் பண்றோம்னு சொன்னீங்களே விஜய் சார். அந்த வாக்குறுதி என்னாச்சு? அரசுப் பணியாளருக்கு மூணாவது குழந்தை பொறந்தா பேறுகால லீவு கொடுக்குறிங்க ஆனா தற்காலிகப் பணியாளருக்கு மட்டும் அது கிடையாதா? என்னங்க நியாயம் இது? நாங்க என்ன பாவம் செஞ்சோம்? எங்களோட நியாயமான கோரிக்கையை முதல்வர் நிறைவேத்தி தரணும்" என்றனர் ஆதங்கமாக.
இதற்கிடையே தூய்மைப் பணியாளர்களையும், சங்க பிரதிநிதிகளையும் சந்தித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய, தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், 6வது நான் போராட்டத்தின்போது அவர்கள் திடீரென மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றது பரபரப்பை ஏற்படுத்த, அன்றிரவு போராட்டம் நடக்கும் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதும் சர்ச்சையானது. தொடர்ந்து. 'தமிழக முதல்வரை சந்தித்துப் பேசும் வரை எங்களது போராட்டம் ஓயாது என தூய்மைப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதியிடம் பேசினோம். "தவெக அரசிலும் இந்த நிலை தொடர்வது வருத்தமளிக்கிறது. இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பணி நிரந்தரம், மகளிர் பேறுகால விடுப்பு உள்ளிட்டவை சம்பந்தமாக ஏதாவது நடவடிக்கை எடுப்பார்கள் என நினைத்தோம் ஆனால் அவர்களிடமிருந்து உறுதியான எந்த பதிலும் கிடைக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் அறிவித்த 832 ரூபாய் சம்பளத்தை தருவதற்கும் மறுக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் கடந்த ஆட்சிக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை.
காவல்துறையின் ஒடுக்குமுறையும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது அடிப்பது. உதைப்பது, ஆண் போலீஸாரை பெண் பணியாளர்கள் மத்தியில் இறக்குவது. அவமானப்படுத்தி பேசுவது, கைது என்ற பெயரில் பெண் தூய்மைப் பணியாளர்களை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போலீஸ் வண்டியிலேயே வைத்திருந்து இயற்கை உபாதைகளுக்குக்கூட செல்லவிடாமல் கொடுமைப்படுத்துவது என எல்லாமே நடக்கிறது. நாங்கள் முதல்வரை பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம். தொழில்துறையை சார்ந்தவர்கள், திரைத்துறையில் உடன் நடித்தவர்களை எல்லாம் முதல்வர் பார்க்கிறார். ஆனால் எங்கள் ஜனங்களையும், எங்கள் சங்கத்தையும் ஏன் சந்திக்க மறுக்கிறார்?
அதேபோல, அரசாணை எண் 62ஐ ஊராட்சி முதல் மாநகராட்சி வரை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறோம். அதற்கு எதிராக தவெக அரசு பதில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. அதை திரும்பப்பெற்று, அந்த அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். அமைச்சர் ராஜ்மோகன் எங்களை சந்தித்தபோது, 832 ரூபாய் சம்பளம் பற்றி பார்க்கிறோம். தரமில்லாத சாப்பாடுக்கு பதிலாக உணவுப்படியாக 100 ரூபாய் போன்ற சில உடனடி கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால், இதுகுறித்து முதல்வர், செயலாளர்களிடம் பேசவேண்டும்' என்றெல்லாம் சொன்னார். உறுதியான பதிலேதும் சொல்லவில்லை. அதனால் 'நீங்க கிளம்பலாம் எங்க போராட்டம் தொடரும் என சொல்லிவிட்டோம் என்றார்.
இப்படியான சூழலில், போராட்டக் களத்திற்குச் சென்ற தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி, அமைச்சர் இங்கு மீண்டும் வருவதாக இருந்த சூழல் மாறியதால்தான் நான் வந்திருக்கிறேன். என்றுமே இந்த அரசு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். உங்களது பிரச்னைகள், வேதனைகள் எல்லாம் எங்களுக்கு நன்றாக தெரியும். அதையெல்லாம் உணர்ந்த அமைச்சர் ராஜ்மோகன், முதல்வரோடு பேசி உங்களுக்கு நல்லதொரு தீர்வை உறுதியாக எடுப்பார். காவல்துறை நெருக்கடிகள் ஏதும் உங்களுக்கு இருக்காது. உங்களுக்குரிய மரியாதையை காவல்துறை கண்டிப்பாக கொடுக்கும். நீங்கள் இப்போது வீட்டுக்குச் செல்லுங்கள்" என அவர் சொல்ல, போராட்டக்காரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஆட்சிக்கு வர்றவங்க எல்லாம் ஏமாத்தினா எப்படிங்க?