Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

நவாஸ்கனி எம்.பி வழக்கு – நிராகரிக்க நீதிமன்றம் மறுப்பு

By Jayakumar
21 Apr 2025, 05:45 PM
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி, தன்னை எதிர்த்து, சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை விட, ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து பன்னீர்செல்வம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், தேர்தல் வேட்புமனுக்களில் உண்மை தகவல்களை மறைத்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

நவாஸ்கனி எம்.பி மனு தள்ளுபடி

இந்நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி எம்.பி. நவாஸ்கனி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி எம்.பி. நவாஸ்கனி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், தேர்தல் வழக்கை அடுத்தகட்ட விசாரணைக்காக ஜூன் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.