Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

முருக பக்தர்கள் மாநாட்டால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் – எல்.முருகன்

By Jayakumar
07 Jun 2025, 10:39 AM
தங்களுக்கான ஒரு ஒற்றுமைக்கான தளமாக முருகன் மாநாட்டை முருக பக்தர்கள் பார்க்கிறார்கள் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விளக்கம்
கோவை செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “மதுரையில் வரும் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு பாஜக நடத்தும் நிகழ்ச்சி கிடையாது.

ஒற்றுமை தளமாக முருகன் மாநாடு

சங்பரிவார்கள் நடத்தும் நிகழ்ச்சி கிடையாது.அனைத்து தரப்பு மக்களும் இணைந்து நடத்தக்கூடிய மாநாடு. கந்த சஷ்டி கவசத்தை எப்படி இழிவுபடுத்தினார்கள். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், வெற்றிவேல் யாத்திரைக்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பை அளித்தனர்.

திருப்பரங்குன்றத்தில் நடந்த விசயங்கள் அனைவரும் அறிந்தது. அதுபோல், இந்து மக்களுக்கு எதிரான விசயங்கள் பரப்பப்பட்டு வருகிறது. எனவே, இந்துக்கள் தங்களுக்கான ஒரு ஒற்றுமைக்கான தளமாக முருகன் மாநாட்டை முருக பக்தர்கள் பார்க்கிறார்கள்.அதற்காக ஆதரவும் கொடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்

முருகன் மாநாடு தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய மாநாடாக இருக்கும். குஜராத்தில் சௌராஷ்ட்ரா தமிழ்ச்சங்கம் நடத்தி உள்ளோம். வாரணாசியில் காசி தமிழ் சங்கம் நடத்தியுள்ளோம். இதனை ஒவ்வொரு வருடம் நடத்தி வருகிறோம்.

முருக கடவுள் தமிழ் கடவுள் என்பதால் முருக பக்தர் மாநாடு தமிழகத்தில் நடத்துகிறோம். இதில் தமிழர்கள் கலாச்சாரம், ஒற்றுமை, வீர விளையாட்டு, இலக்கியங்களை காட்சிப்படுத்துகிறோம். தமிழர்களின் கலாச்சாரத்தை உத்தரப்பிரதேச மக்கள் எப்படி கொண்டாடி வருகிறார்கள் என்பதை அவர்கள் நேரில் வந்து பார்க்க வேண்டும்” என தெரிவித்தார்.