Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

தண்ணீரில் மிதந்த 5 மாத குழந்தையின் உடல்.. முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்ன தாய்

By nagalekshmi
06 Apr 2025, 06:39 PM
தண்ணீர் பேரலில் குழந்தையின் உடல் மிதந்த சம்பவத்தில் தாய் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கண்ணாங்குடி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (31), புலியூரைச் சேர்ந்த லாவண்யா(21) இருவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 5 மாத ஆதிரன் என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில் குடும்ப தகராறு காரணமாக லாவண்யா தனது பெற்றோர் வீட்டில் கடந்த 3 மதமாக குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

கணவர் மணிகண்டன் நாக்பூர் மாநிலத்தில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இருவரும் வயது வித்தியாச பிரச்சனை மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக விவாகரத்து பெரும் எண்ணத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புலியூரில் பெற்றோர் வீட்டில் வசித்து வரும் லாவண்யா நள்ளிரவில் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது லாவண்யா திடீரென குழந்தையை காணவில்லை என கத்தி கூச்சலிட்டதாகவும், முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் தாலிச் சங்கிலியை பறித்து சென்றதாகவும், குழந்தையையும் தூக்கி சென்றதாகவும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் பதற்றம் அடைந்த உறவினர்கள் வீட்டைச் சுற்றி குழந்தையை தேடி உள்ளனர். அப்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள தண்ணீர் பேரலில் குழந்தையின் உடல் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கீரனூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து குழந்தையின் தாய் லாவண்யாவை கீரனூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் மணிகண்டன் தரப்பையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். லாவண்யா முன்னுக்குபின் முரணாக தகவல்களை கூறி வருவதால் தொடர்ந்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.