தமிழ்நாடு

சிறுமி பாலியல் வழக்கு... குற்றவாளியைப் பிடிக்க ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்த காவல்துறை!

By VASUKI
21 Jul 2025, 08:06 PM
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் நபர்குறித்து நம்பகமான தகவல் வழங்குவோருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி என்று காவல்துறை அறிவித்துள்ளது. சந்தேக நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 99520 60948 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 10 நாட்களாகத் தேடப்பட்டு வரும் குற்றவாளியின் புகைப்படத்தை ஏ.ஐ. தொழில்நுட்பம்மூலம் உருவாக்கிப் போலீசார் வெளியிட்டுள்ளனர். ஆரம்பாக்கம் போக்சோ வழக்கின் குற்றவாளி தொடர்பான தகவலுக்கு ரூபாய் 5 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை 12 ஆம் தேதி அன்று, திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார், இது தொடர்பாக ஆரம்பாக்கம் காவல் நிலைய குற்ற எண். 113/2025 இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணையின்போது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார், இருப்பினும், சந்தேக நபரின் பெயர் மற்றும் முகவரி தெரியவில்லை. இது தொடர்பாகக் காவல்துறை தரப்பில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இவ்வழக்கு விசாரணைக்கு உதவியாகச் சந்தேக நபரை அடையாளம் காணவும், வழக்கைத் துப்புதுலக்கவும் பயனுள்ள குறிப்பிடத் தக்க மற்றும் நம்பகமான தகவலை வழங்குபவருக்கு ரூ. 5,00,000/- (ரூபாய் ஐந்து லட்சம்) ரொக்கப் பரிசு வழங்கப்படும். மேலும், தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்பான ஏதேனும் தகவல் அல்லது விவரம் தெரிந்தவர்கள் இதற்கென ஒதுக்கப்பட்ட திருவள்ளூர் மாவட்ட காவல் கைபேசி எண் 99520 60948 என்ற எண்ணில் நேரடி அழைப்பு, குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சந்தேக நபரின் புகைப்படங்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.