Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

பதற்றம் வேண்டாம்.. முககவசம் கட்டாயமில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

By MUTHUKRISHNAN
31 May 2025, 12:54 PM
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள் முகக்கவசம் அணிவது நல்லது. வெவ்வேறு பெயர்களால் வரக்கூடிய கொரோனா பாதிப்புகளால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுவதில்லை, தற்போது பரவி வரும் கொரோனாவால் பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டியதில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 2025-26 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி கருவுறுதலுக்கு முன் மற்றும் பிறப்பிற்கு முந்தைய கருவின் தன்மையறியும் தொழில்நுட்ப முறைகள் செயல் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள், கூடுதல் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்த பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு வினாக்களுக்கு பதிலளித்தா. அதன் விவரம் பின்வருமாறு-

”நடப்பு ஆண்டு நிதி நிலை அறிக்கையில் மக்கள் நல்வாழ்வு துறையில் 122 அறிவிப்புகள் வெளியிட்டப்பட்டு 96 அறிவிப்புகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அந்த வகையில் அறிவிப்பு எண் 91 இன்று செயல்படுத்தபட்டுள்ளது. நான்கு மண்டலங்களாக தமிழகத்தை பிரித்து பாலின தேர்வை தடை செய்யும் சட்டம் செயல்படுத்தும் முயற்சி இன்று நடைமுறைபடுத்தபட்டுள்ளது. பல்வேறு அமர்வுகள் ஏற்பாடு செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு பயிற்சிகள் வழங்கபட்டுள்ளது.

2019 இறுதியில் கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் தொடங்கி அது உருமாற்றம் பெற்று பல்வேறு பெயர்களில் வலம் வரத் தொடங்கியது. கடந்த 2023 ஆம் ஆண்டு மே 5 தேதி உலக சுகாதார அமைப்பு கொரோனா நெருக்கடி நிலையை திரும்ப பெற்றது. மேலும், வெவ்வேறு பெயர்களால் வரக்கூடிய கொரோனா பாதிப்புகளால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுவதில்லை. பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டியதில்லை.

மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியதாகவும், அதில் அடிக்கடி கையை கழுவ வேண்டும், தும்மலின் போது கையை மூடிக்கொண்டு தும்ம வேண்டும். இது போன்ற வழக்கமான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் பொது இடத்திற்கு செல்லும் பொழுது முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது என்ற அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். இதில் எதுவும் கட்டாயம் கிடையாது, இந்த முறைகளை பின்பற்றினால் நல்லது என்று தான் சொல்லியுள்ளனர். இதை நாமும் பின்பற்றுவது நல்லது” என்றார்.

மேலும், ”பூனேவில் இருக்கிற வைரஸ் பற்றிய நேஷனல் இண்டியூஸ் ஆப்-க்கு 19 மாதிரிகளை முடிவுக்காக அனுப்பி இருக்கிறோம். இது வீரியம் இல்லாத கொரோனா என்று கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்த அமைச்சர், நேற்று தமிழகத்தில் 35 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு எதுவுமில்லை. கடந்த 6 மாதங்களில் 4 பேர் டெங்கு பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகள் மிகத் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது” எனவும் கூறினார்.