Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

அம்மன் சிலையில் பால் வடிந்ததால் பரபரப்பு...தீயாய் பரவிய தகவலால் குவிந்த பக்தர்கள்

By Jayakumar
05 Apr 2025, 07:03 AM
கோவிலில் ஏராளமான பெண்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டுச் சென்றனர்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் அருள்மிகு கயிலாதநாதர் உடனுறை உமா மகேஸ்வரியம்மன் (சிவன்) கோயில் அமைந்துள்ளது.

சிலையில் வடிந்த பால்

இக்கோயில் கருவறையில் உள்ள மூலவர் உமா மகேஸ்வரி அம்மன் சிலையிலிருந்து பால் வடிந்தது போன்ற நிகழ்வு தெரிந்துள்ளது. மேலும் அம்மன் சிலை மார்பு பகுதியில் இருந்து சொட்டு, சொட்டாக பால் வடிந்ததாக கோயில் அர்ச்சகர் கூறியுள்ளார்.

இத்தகவல் காட்டுத் தீயாக பரவியதையடுத்து, சுற்று வட்டார கிராம மக்கள் திரளான பெண்கள் கோயில் வளாகத்தில் கூடி அம்மனை வழிபாடு செய்தனர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

குவிந்த பக்தர்கள்

இது குறித்து கோவில் அர்ச்சகர் கூறும்போது, கடந்த சில நாட்களாக அம்மன் சிலையில் இருந்து பால் வடிவதாகவும், பால் அபிஷேகம் செய்வதால், இது போன்று பால் வடிவதாக நினைத்த நிலையில், பத்து குடம் தண்ணீர் ஊற்றிய பின்பும் பால் தொடர்ந்து வடிந்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் தான் தெரிவித்ததாகவும், இது அம்மனின் அருள் எனவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கோவிலில் ஏராளமான பெண்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டுச் சென்றனர். மேலும் அம்மன் சிலையில் இருந்து பால் வடிவதாக தகவல் வெளியான நிலையில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.