தமிழ்நாடு

தமிழக மக்களே உஷார்.. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை

By leninakathiya
13 Oct 2024, 10:10 PM
வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவமழை அடுத்த 4 நாட்களில் விலகும் நிலையில், வரும் 15ஆம் தேதி அல்லது 16ஆம் தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் நாளை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சை, திருவாரூர், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும் தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து நாளை விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கனமழை முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், வரும் 16ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும் எனவும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் கனமுதல் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.