தமிழ்நாடு

தமிழக டிஜிபி-யாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!

By Christon
29 May 2026, 05:29 PM
தமிழகக் காவல்துறையின் புதிய டி.ஜி.பி.யாக மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், தமிழகக் காவல்துறையின் டி.ஜி.பி.யாக மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தற்காலிகப் பொறுப்பு டி.ஜி.பி.யாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது தேர்தல் முடிந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், நிரந்தர டி.ஜி.பி.யைத் தேர்ந்தெடுப்பதற்கான மூன்று பேர் கொண்ட பட்டியல் யுபிஎஸ்சி-க்கு அனுப்பப்பட்டது.

டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் மகேஷ்குமார் அகர்வால் ஆகிய மூவர் அடங்கிய பட்டியலுக்கு யு.பி.எஸ்.சி. ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, டிஜிபி சந்தீப் ராய் ரத்தோருக்குப் பதிலாக மகேஷ்குமார் அகர்வாலை புதிய டி.ஜி.பி.யாக நியமித்து அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவரான மகேஷ்குமார் அகர்வால், தனது தந்தை ஒரு வழக்கறிஞர் என்பதால் சட்டம் படித்துவிட்டுப் பின்பு சிவில் சர்வீஸ் தேர்வெழுதினார். கடந்த 1994-ஆம் ஆண்டு, தனது 22-ஆவது வயதிலேயே ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றுத் தமிழ்நாடு கேடர் அதிகாரியாகப் பணியில் இணைந்தார். சி.பி.ஐ., சி.பி.சி.ஐ.டி. உள்ளிட்ட பல்வேறு முக்கியப் புலனாய்வு அமைப்புகளில் திறம்படப் பணியாற்றியுள்ள இவர், தற்போது புதுடெல்லியில் எல்லை பாதுகாப்புப் படையின் (BSF) டி.ஜி.பி.யாகப் பணியாற்றி வருகிறார்.