தமிழ்நாடு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 24 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்பு!

By Christon
18 Feb 2026, 02:44 PM
தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை நிலவரப்படி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அதே பகுதிகளில் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மழை மற்றும் வானிலை நிலவரம்

பிப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும். இருப்பினும், காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் நகர்வு காரணமாக பிப்ரவரி 20-ம் தேதி தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே தொடரும்.

பனிமூட்ட முன்னறிவிப்பு

பனிமூட்டத்தைப் பொறுத்தவரை, பிப்ரவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வட தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.