Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சிக்கன் குழம்பில் பல்லி.. உணவகத்தில் நாடகமாடிய 4 பேருக்கு போலீசார் வலை

By Jayakumar
05 Jun 2025, 01:21 PM
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கிவரும் உணவகத்தில் பரிமாறப்பட்ட சிக்கன் குழம்பில் பல்லி கிடந்ததாக நாடகமாடிய 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ் புரம் வி.சி.வி லேஅவுட் பகுதியில் கோவை பிரியாணி என்ற உணவகம் 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த 27-ம் தேதி பிற்பகல் 2:50 மணி அளவில் மது போதையில் 4 பேர் காரில் உணவகத்துக்கு சென்றுள்ளனர். மேலும், அவர்கள் சிறிது நேரம் உணவு எதையும் ஆர்டர் செய்யாமல் சுற்றும் முற்றும் பார்த்தபடி இருந்ததாக தெரிகிறது. அதன் பின்னர் அவர்கள் பிரியாணி ஆர்டர் செய்ததையடுத்து, ஊழியர் பிரியாணியை இலையில் பரிமாறியுள்ளார். இந்நிலையில், பிரியாணியில் ஊற்றிய சிக்கன் குழம்பில் பல்லி இறந்து கிடப்பதாக ஒருவர் கூச்சல் எழுப்பியுள்ளார். உடனே அவருடன் வந்த நபர்களும் சத்தம் போட்டபடி ஊழியரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து உணவகத்தின் மேலாளர் சுப்பிரமணியம் உடனே அங்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

அப்போது, அவர்கள் செயற்கை பல்லியை குழம்பில் போட்டது தெரிய வந்துள்ளது. மேலும், அவர்களில் ஒருவர் வெளியே சென்று வாந்தி எடுப்பது போல் நடித்ததாகவும், அதனை மற்றொரு நபர் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த 4 நபர்களும் அங்கிருந்து காரில் வேகமாக புறப்பட்டு சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து, உணவகத்தின் உரிமையாளர் உமாபதி அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது, உணவகத்தில் நடந்த சம்பவம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை என்று உரிமையாளருக்கு தெரியவந்துள்ளது. மேலும், பிற்பகல் 3 மணிக்கு நடந்த சம்பவத்திற்கு நடராஜன் என்பவர் 1:20 மணிக்கே பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்த விபரமும், அதற்குரிய ஆதாரங்களுடன் கோவை மாநகர காவல் ஆணையரிடம் உரிமையாளர் உமாபதி புகார் அளித்துள்ளார்.

இவர் அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, நடராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது ஆர்.எஸ்.புரம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.