Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சாம்பாரில் கிடந்த பல்லி.. அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!

By Christon
02 Jul 2025, 08:56 PM
கிருஷ்ணகிரி அருகே அரசு தொடக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அருகே உள்ள செல்லக்குட்டபட்டி ஊராட்சி புங்கம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி மற்றும் ஆசிரியர் வினோத் குமார் ஆகியோர்பணியாற்றி வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் 32 மாணவர்கள் படித்து வரும் நிலையில் இவர்களுக்கு காலை உணவு திட்டத்தின் மூலம் பொறுப்பாளர் முருகம்மாள் மற்றும் உதவியாளர் செம்பருத்தி ஆகியோர் உணவு சமைத்து வழங்கி வருகின்றனர். வழக்கம்போல இன்று காலை மாணவர்களுக்கு பொங்கல் மற்றும் பருப்பு சாம்பார் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,மாணவபர்களுக்கு வழங்கிய சாம்பாரில் பல்லி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முருகம்மாள், உடனடியாக உணவை அப்புறப்படுத்தி மண்ணில் புதைத்தார். மேலும் இந்த உணவை சாப்பிட்ட நான்கு மாணவர்களை அவரது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இதனையடுத்து, மேல் சிகிச்சையாக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாணவர்கள் அழித்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தொடக்க பள்ளியில் போச்சம்பள்ளி வட்டாட்சியர் மற்றும் காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காலை உணவு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்த சம்பவம் பெற்றோர் மற்றும் கிராமத்தின் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.