தமிழ்நாடு

அய்யகோ.. மீண்டுமா? வால்பாறையில் சிறுத்தை தாக்கி 8 வயது சிறுவன் பலி!

By MUTHUKRISHNAN
12 Aug 2025, 06:36 AM
வால்பாறை பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவனை சிறுத்தை கவ்விச் சென்றுள்ளது. வனத்துறையினரின் தேடுதலில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையை அடுத்த பச்சைமலை எஸ்டேட்டில் கடந்த ஜூலை மாதம், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியை சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் சிறுமியின் தாயின் கண் முன்னே நடந்தது. பின்னர் நீண்ட தேடுதலுக்குப் பிறகு புதருக்குள் இருந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது சிறுத்தையினை டாப்சிலிப் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். இந்த சோகமான சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு துயரம் நிகழ்ந்துள்ளது.

வால்பாறை, வாட்டர் ஃபால்ஸ் அருகே உள்ள வெவ்வர்லி எஸ்டேட்டில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர் ஒருவரின் 8 வயது மகன் நூர் இஸ்லாம், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த சிறுத்தை ஒன்று, சிறுவனைக் கவ்விச் சென்றது.

இதை அறிந்த சிறுவனின் பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர். மேலும், இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுவனைத் தேடினர். அப்போது, வீட்டின் அருகே உள்ள புதருக்குள் சிறுவன் சடலமாகக் கிடந்தான்.

சிறுவனின் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வால்பாறையில் தொடர்ச்சியாக நடக்கும் சிறுத்தை தாக்குதல்களால், அங்கு வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக நடந்து வரும் சிறுத்தை தாக்குதல்களில் இது நான்காவது உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துயரச் சம்பவங்களால் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.