Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ஊட்டி மலை ரெயில் பாதையில் மண் சரிவு.. மலை ரயில் போக்குவரத்து ரத்து!

By VASUKI
10 May 2025, 09:32 AM
மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால், ரெயில் பாதையில் விழுந்த ராட்சச பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. ரெயில் பாதையை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் இரண்டாவது நாளாக மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து வருகின்றனர். பழமை வாய்ந்த மலைரெயிலை யுனெஸ்கோ நிறுவனம் கடந்த 2005ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் ஹில்குரோவ்_ரன்னி மேடு ரெயில் நிலையங்கள் இடையே திடீரென எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டு ரெயில் பாதையில் தண்டவாளத்தில் பெரிய பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன இதனால் ரெயில் பாதையில் தண்டவாளங்கள் சேதமடைந்தன.

இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 7.10 மணிக்கு 200 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட மலை ரெயில் இடையில் கல்லாறு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. மண் சரிவு காரணமாக குன்னுரை நோக்கி செல்ல முடியாததால் மீண்டும் மலைரெயில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு இயக்கி வரப்பட்டது இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர. ரயில் பயணிகளுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது.

மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மற்றும் ஊட்டி மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை நேற்றும் இன்றும் இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டது. இதனை சேலம் ரயில்வே கோட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்வே உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் குன்னூர் மலை ரயில் இருப்பு பாதை இளநிலை பொறியாளர் தலைமையில் ரயில்வே தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ரயில் பாதையில் விழுந்து கிடந்த பெரிய ராட்சசப் பாறையை கம்ப்ரஸர் மூலம் துளையிட்டு வெடிவைத்து தகர்த்தனர். ரயில் பாதையை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.