தமிழ்நாடு

கவின் ஆணவக் கொலை வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு!

By Christon
30 Jul 2025, 03:39 PM
திருநெல்வேலி அருகே ஐ.டி.ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி அருகே கடந்த 27 ஆம் தேதி ஐ.டி.ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சாரணடைந்த நிலையில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கவின் குமார் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்து குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின்செல்வகணேஷ் என்பவர் கடந்த 27 ஆம் தேதி அன்று திருநெல்வேலி மாநகரில் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக, இறந்த கவின்செல்வகணேஷின் தாயார் கொடுத்த புகார் மனுவின் மீது பாளையங்கோட்டை காவல் நிலைய குற்ற எண் .396/2025 296(b), 49, 103(1) BNS प 3(1)(r), 3(1)(s), 3(2)(v) தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித், அவரது தந்தை சரவணன் மற்றும் தாயார் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் கொலைசெய்யப்பட்ட வரும், குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித்தின் சகோதரியும் பழகி வந்த நிலையில், இது தொடர்பான பிரச்சனையில் இந்த கொலை நடந்துள்ளதாகத் தெரியவருகிறது. குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித் அதே நாளில் (ஜூலை 27) கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் அவர் மீது இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவல் சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றி வருகின்றனர். விசாரணை பாரபட்சமற்றதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக இவர்கள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும், சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்காக, இந்த வழக்கு குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை (CBCID) க்கு மாற்றப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.