தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளராக (அரசியல்), அவரது நீண்ட கால மேலாளரான ஜெகதீஷ் பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
முதல்வர் விஜய் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்த காலத்தில் இருந்தே அவருக்குத் தனி மேலாளராகப் பணியாற்றி வந்தவர் ஜெகதீஷ் பழனிசாமி. விஜய் அரசியலில் களம் கண்ட பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூகங்கள் மற்றும் வார் ரூம் (War Room) பணிகளை ஒருங்கிணைத்த 'ரூட்' (Route) நிறுவனத்தின் நிறுவனரான இவர், தற்போது முதல்வரின் அரசியல் தனிச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கான பணிக்கான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் பின்னர் தனியாக வெளியிடப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகன் டூ தனிச் செயலாளர்: நெகிழ்ச்சிப் பதிவு
இந்த நியமனத்தைத் தொடர்ந்து, முதல்வர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி ஜெகதீஷ் பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு, உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன், ஒரு தீவிர ரசிகனாக வரிசையில் நின்றிருந்தேன். இன்று, அதே நான் மாநிலத்தின் முதல்வரின் தனிச் செயலாளராக உங்கள் அருகில் நிற்கிறேன். வாழ்க்கை ஒரு முழு வட்டமடித்து மீண்டும் அதே இடத்திற்கு வந்தது போல் உணர்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடினமான சூழ்நிலைகளில் வேகமாக ஓடவும், உயரங்களை அடையவும் தனக்கு ஊக்கமளித்த முதல்வருக்கு தனது வாழ்நாள் நன்றியை அப்பதிவின் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.