தமிழ்நாடு

அந்த வார்த்தையை சொல்லிருக்க கூடாது..! வருத்தம் தெரிவித்த அமைச்சர் அருண்ராஜ்!

By Christon
13 Aug 2026, 09:21 PM
'ஊனமுற்றோர்' என்ற சொல்லை பயன்படுத்தியதற்கு அமைச்சர் அருண் ராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
2026-27-ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு மற்றும் சிறப்புப் பிரிவினருக்கான சேர்க்கை ஆணைகளை மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் வழங்கினார்.

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற இந்தச் சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில், மாற்றுத்திறனாளி மாணவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அமைச்சர் 'ஊனமுற்றோர்' என்ற சொல்லைப் பயன்படுத்தினார். வழக்கத்தில் தவிர்க்கப்பட வேண்டிய இந்த வார்த்தையை அவர் குறிப்பிட்டது அரங்கில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைதளங்களிலும் இதற்குக் கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின.

இதனைத் தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்ட அமைச்சர் அருண்ராஜ், "இன்றைய தினம் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ சேர்க்கை ஆணைகளை வழங்கினோம்.

இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் மாற்றுத் திறனாளி மாணவர்களை குறிப்பிடும்போது... வழக்கத்திலிருந்து நாம் தவிர்க்க வேண்டிய வார்த்தையை தவறுதலாக பயன்படுத்தியமைக்காக மிகவும் வருந்துகிறோம்.

மாற்றுத் திறனாளிகள் மீது பெரும் அன்பும் மரியாதையும் கொண்டிருக்கிறோம். அன்புச் சகோதர சகோதரிகளுக்கு நமது மனப்பூர்வமான வருத்தத்தினை இதன் மூலம் பதிவு செய்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.