தமிழ்நாடு

தமிழ்நாட்டின் உரிமைக்குரலை எழுப்பினேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

By MUTHUKRISHNAN
25 May 2025, 05:20 PM
டெல்லிக்கு சென்று நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் உரிமைக்குரலை எழுப்பினேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

கடந்த இரண்டு முறை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் தமிழகத்தில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடக்கும் நிலையில், முதலமைச்சரின் டெல்லி பயணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் முதலமைச்சரின் டெல்லி பயணம் குறித்து விமர்சனம் செய்துள்ளனர்.

உரிமைக்குரலை எழுப்பினேன்

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “டெல்லிக்குச் சென்றேன்; தமிழ்நாட்டின் உரிமைக்குரலை எழுப்பினேன்! ரெய்டுகளுக்குப் பயந்து - சொந்தக் கட்சிக்காரர்களுக்குக்கூட தெரியாமல் டெல்லி சென்று - கட்சி அலுவலகத்தைப் பார்வையிட வந்தேன் என ஊடகங்களிடம் கூறி - பல கார்கள் மாறி - கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை! டெல்லி என்றாலே கிலி பிடித்து அஞ்சி நடுங்கும் எதிர்க்கட்சியினரின் அடிவயிற்றில் புளியைக் கரைக்க வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டதை இரசித்தபடியே டெல்லி பயணம் அமைந்தது!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் போது சென்னையில் பேரணி சென்று ஒற்றுமைக்குரல் எழுப்பினேன்! நாட்டின் நலனை எப்படி தி.மு.க. விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என நிதி ஆயோக் கூட்டத்தில் உரையாற்றினேன்! தமிழ்நாட்டின் நலன் காத்திடவும் - மாநில உரிமைகளை வென்றெடுக்கவும் #களம்2026-க்கு ஆயத்தமாக ஜூன் 1-ஆம் நாள் மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்குழுவில் உங்களைச் சந்திக்க நான் ரெடியாகிவிட்டேன்… நீங்கள்?” என தெரிவித்துள்ளார்.