Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட பல்கலைக்கழகத்தை புறக்கணிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

By Christon
28 Nov 2025, 12:51 PM
ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட காரணத்திற்காக பல்கலைக்கழகத்தை எந்த பாகுபாடும் காட்டவில்லை. பட்டமளிப்பு விழாவை கூட நாங்கள் புறக்கணித்தது கிடைாது என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி உரையாற்றினார். இந்தப் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டதால் தங்கள் அரசு எந்தப் பாகுபாடும் காட்டவில்லை என்றும், இதுவே தாம் நிறுவ விரும்பும் அரசியல் மாண்பு என்றும் அவர் பெருமிதத்துடன் பேசினார்.

நடிகர் சிவகுமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம்

இந்தப் பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமாருக்கு வாழ்நாள் சாதனைக்காக மதிப்புறு முனைவர் பட்டம் (கௌரவ டாக்டர் பட்டம்) வழங்கி முதல்வர் ஸ்டாலின் கௌரவித்தார். அப்போது பேசிய அவர், "பட்டமளிப்பு விழாவிற்கு முதல்வராக, பல்கலை வேந்தராக மட்டுமல்ல, கலைஞன் என்ற முறையில் வந்துள்ளேன். நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துரு ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கியதில் பெருமை அடைகிறேன். சிவகுமாருக்கு டாக்டர் பட்டம் மிகவும் பொருத்தமான ஒன்று. அவர் புகழ்பெற்ற நடிகர் மட்டுமல்ல, நல்ல ஓவியர். சிறந்த சொற்பொழிவாளர். கருணாநிதிக்கு நெருக்கமானவர்" என்று புகழாரம் சூட்டினார்.

அரசியல் மாண்பும் நிதி ஒதுக்கீடும்

பல்கலைக்கழகத்தின் பெயர் குறித்துப் பேசிய முதலமைச்சர், "ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் நாங்கள் எந்தப் பாகுபாடும் காட்டவில்லை. இந்த பட்டமளிப்பு விழாவைக்கூட நாங்கள் புறக்கணிக்கவும் இல்லை. 2021-ம் ஆண்டிற்கு இந்த பல்கலையைச் செழிப்பாக வளர்த்து இருக்கிறோம். இதுதான் நான் நிறுவ நினைக்கும் அரசியல் மாண்பு; இந்த மாண்பு தொடர வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

மேலும், 2021-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த பல்கலைக்கழகத்தில் நிறைய மாணவர்கள் சேர்ந்து இருக்கிறார்கள் என்றும், புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்து, அதிக நிதியை ஒதுக்கி, ஆராய்ச்சி மையம் உட்பட பல அமைப்புகளை உருவாக்க நிதி வழங்கினோம் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தில் ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவிற்கான மானியத்தொகை ரூ.3 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

புதிய பள்ளி மற்றும் ஏஐ குறித்த கருத்து

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் வளையங்குளத்தில் கிராமியக் கலைப் பயிற்சி பள்ளி அமைக்க அரசின் சார்பில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், "ஏஐ (Artificial Intelligence) மூலம் பலரும் பாடல்கள், இசைகள், ஓவியங்கள் என உருவாக்குகின்றனர். அதனால் நமக்கான வாய்ப்புகள் குறைந்துவிடும் என்று நீங்கள் யாரும் கவலைப்படக் கூடாது" என்றும் மாணவர்களுக்கு அவர் நம்பிக்கை தெரிவித்தார்.