Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

காதலர் தின ஆஃபருக்கு எதிர்ப்பு.. தாலிக் கயிறுடன் வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

By nagalekshmi
15 Feb 2025, 08:13 AM
காரைக்குடியில் காதலர் தின ஆஃபருக்கு எதிர்ப்பு தெரிவித்து தாலி கயிறுடன் வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்த நிலையில் நான்கு பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பேக்கரி நிறுவனத்தினர் காதலர் தின ஆஃபரை அறிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர்  அக்னி பாலா தலைமையில் ஏராளமானோர் பேக்கரி முன்பு தாலிக் கயிறுடன் குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  வடக்கு காவல்துறையினர் இந்து முன்னணி அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். தொடர்ந்து காரைக்குடி வடக்கு காவல்துறையினர் காதலர் தின ஆஃபர் அறிவித்த பேக்கரி நிறுவனத்தாரிடம் புகாரை பெற்று இந்து முன்னனி மாவட்ட செயலாளர் அக்னி பாலா, தேவகோட்டை நகரச் செயலாளர் சுரேஷ், மற்றொரு நிர்வாகியான  மாரியப்பன், காரைக்குடி நகர செயலாளர் கார்த்திகேயன் மற்றும் இளையராஜா ஆகிய ஐந்து  பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்கள் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்து முன்னணி அமைப்பினரை கைது செய்த தகவல் பரவியதை அடுத்து  பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வடக்கு காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  கைது செய்யப்பட்ட இந்து மக்கள் நல கட்சியைச் சேர்ந்த  இளையராஜாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை காவல் துறையினர் பிணையில் விடுவித்தனர்.

தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் கைது செய்யப்பட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் நான்கு பேரை தேவகோட்டை  குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி பாலா உட்பட நான்கு பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகிகள் நான்கு பேரையும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கிளைச் சிறையில் போலீசார் அடைத்தனர்.