Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

தமிழகத்தில் கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை.. 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

By Christon
23 Sep 2025, 02:42 PM
தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 29 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், நேற்று (செப்.22) காலை வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 08:30 மணி அளவில் மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் நிலவி, பின்பு வலுகுறையக்கூடும்.

வரும் 25-ஆம் தேதி வாக்கில் மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு திசையில் நகர்ந்து, 26-ஆம் தேதி வாக்கில், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வருகின்ற 27-ஆம் தேதி கரையை கடக்கக்கூடும்.

கனமழை எச்சரிக்கை

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், வரும் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அதேபோல், வரும் 26 ஆம் தேதி தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.