Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை.. 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

By Christon
26 Sep 2025, 06:38 AM
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, கன்னியாகுமரி, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த நிலையில், தமிழகத்தில் வரும் அக்.1 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறும் பட்சத்தில், அது தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நாளை கரையை கடக்கக்கூடும்.

கனமழை எச்சரிக்கை

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதேபோல் நாளை (செப்.27) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை வானிலை மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வரும் 28 ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.