Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை.. 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

By Christon
02 Oct 2025, 03:21 PM
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, கோவை, ராணிப்பேட்டை திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று லேசான மழை பெய்தது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 8-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், வங்கக் கடலில் வலுப்பெற்றிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிஸா மற்றும் அதனையொட்டிய ஆந்திர கடல் பகுதியில் கோபல்பூர் மற்றும் பாராதீப்புக்கு இடையே இன்றிரவு கரையைக் கடக்கக் கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை

இதன் காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல், நாளை (அக்.03) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 4 ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், வரும் 6 ஆம் தேதி மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.