Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

By Christon
11 Aug 2025, 02:56 PM
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, திருவாரூர், தஞ்சை, கோவை, ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

வளிமண்டல மேலடுக்கு மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 17 ஆம் தேதி வரை பல்வேரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வரும் 13ஆம் தேதி வாக்கில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

கனமழைக்கு வாய்ப்பு

இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 11) விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல், நாளை திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், நாளை மறுநாள் திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னை வானிலை மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை

சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இன்று முதல்வரும் 15 ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதேபோல் தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.