Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

Heavy Rain: தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

By Christon
07 Sep 2025, 02:21 PM
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

இந்த நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும் பூவை மற்றும் காரைக்கால் பகுதிகளும் வரும் 10 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், வரும் 11 முதல் 13 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை எச்சரிக்கை

இதற்கிடையில், தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், நாளை (செப்.8) தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை

சென்னையில் இன்று நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தென்தமிழக கடலோரப்பகுதிகள், அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று முதல் வரும் 9 ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.