Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

Heavy Rain Update: நாளை 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

By Christon
05 Aug 2025, 03:32 PM
தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாகவே பால்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி, தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் நீங்கி நின்றது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேரு இடங்களில் இன்றும் நாளையும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

அதி கனமழைக்கான வாய்ப்பு

நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிக கனமழைக்கான வாய்ப்பு

நாளை (ஆகஸ்ட் 6) நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை மற்றும் மீனவர்களுக்காக எச்சரிக்கை

சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இன்று முதல் முதல் வரும் 7 ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, அப்பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.