தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

By Sumalekha
27 Jun 2026, 09:17 PM
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, இன்று 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மேலும், கடலோர ஆந்திரப் பிரதேசம் முதல் மத்திய மகாராஷ்டிரா வரை, வடக்கு தெலுங்கானா மற்றும் மராத்வாடா பகுதிகள் வழியாக சுமார் 3.1 முதல் 4.5 கிலோமீட்டர் உயரம் வரை காற்றழுத்த தாழ்வு பாதை நீடித்து வருகிறது.

இதன் தாக்கத்தால், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனுடன் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

அதேபோல், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாளை மறுநாளும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதோடு, கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.