தமிழ்நாடு

அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து...திருமங்கலத்தில் பரபரப்பு

By Jayakumar
01 Jun 2025, 10:32 AM
திருமங்கலம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீவிர அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் இருந்து வருகிறது. திருமங்கலம் அரசு மருத்துவமனையில் திருமங்கலம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

இந்த நிலையில் திருமங்லம அரசு மருத்துமனை தீவிர சிகிச்சை பிரிவு கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக விபத்து மற்றும் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகள் யாரும் இல்லாததால் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் கீழே இருந்த படுக்கையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித காயமும் இன்றி பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் ஆறு மாதத்திற்கு முன்பே கட்டிடம் பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிலையிலும், தொடர்ச்சியாக மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.

முதலமைச்சருக்கு கோரிக்கை

இந்த நிலையில் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகள் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை இருப்பினும் முழு கட்டடத்தின் உறுதி தன்மையையும் ஆய்வு செய்ய வேண்டும் என நோயாளிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. திமுக பொதுக்குழுவிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றுள்ள நிலையில், திருமங்கலத்தில் அரசு மருத்துவமனையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.