கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்றைய அதிரடி வீழ்ச்சிக்குப் பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. உலகளாவிய அரசியல் சூழல்களுக்கு ஏற்ப வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால், தங்கம் விலை தொடர்ந்து நிலையற்ற தன்மையுடன் காணப்படுகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் திங்கள்கிழமை சவரன் ரூ.1,18,240-க்கும், செவ்வாய்க்கிழமை ரூ.1,17,840-க்கும், புதன்கிழமை ரூ.1,17,200-க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து நேற்று சவரனுக்கு ரூ.1,200 அதிரடியாகக் குறைந்து ரூ.1,16,000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை விலை மீண்டும் ஏறுமுகத்தைச் சந்தித்துள்ளது.
சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.14,600-க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,16,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலையைத் தொடர்ந்து, வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 மற்றும் கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனையாகி வருகிறது.