தமிழ்நாடு

ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு!

By Christon
09 Oct 2025, 04:18 PM
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.320 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வரும் தங்கத்தின் விலை, இன்று (அக். 9) மாலையில் மீண்டும் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.91 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகிறது.

தங்கம் விலை புதிய உச்சம்

கடந்த மாதம் (செப். 8) ஒரு சவரன் ரூ.80,480-க்கு விற்பனையான தங்கம், அதன்பிறகு படிப்படியாக அதிகரித்து வந்தது. நேற்று முன்தினம் (அக். 7) சவரன் ரூ.89,600-க்கு விற்பனையான நிலையில், நேற்று (அக். 8) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து ரூ.91,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய விலை நிலவரம்

இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.91,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், மாலையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.200 அதிகரித்து, ரூ.91,400 என்ற புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.11,425-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.

வெள்ளி விலையும் உயர்வு

தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று காலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.171-க்கு விற்பனையானது. இந்த நிலையில், மாலையில் வெள்ளி விலை கிராமுக்கு அதிரடியாக ரூ.6 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.177-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள், டாலரின் மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களே இந்தத் தொடர்ச்சியான விலை உயர்வுக்குக் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.