Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

மீண்டும் ரூ 1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

By Christon
22 Dec 2025, 03:48 PM
வாரத்தின் முதல் நாளான இன்று மாலை தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து 1 லட்சத்தை தாண்டியுள்ளது தங்கம் கிராம் 12,570 ரூபாய் விற்பனை ஆகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு கவலை அளித்து வருகின்றன. வாரத்தின் முதல் நாளான இன்று (டிசம்பர் 22), காலை மற்றும் மாலை என இருமுறை ஏற்பட்ட விலை உயர்வால், தங்கம் விலை சவரன் ரூ.1 லட்சத்தைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தங்கத்தின் விலை நிலவரம்: காலை மற்றும் மாலை ஏற்றம்

நேற்று விடுமுறைக்குப் பிறகு இன்று (டிசம்பர் 22) காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.99,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், தங்கம் விலை ரூ.1 லட்சத்தை நெருங்கியதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த விலை உயர்வு மாலையிலும் தொடர்ந்தது. மாலையில் தங்கம் சவரன் மேலும் ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,00,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தைக் கடந்தது. கிராமுக்குக் காலையில் ரூ.80 உயர்ந்திருந்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,570-க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.231-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்த நிலையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.31 லட்சத்துக்கு விற்பனை ஆகிறது.

வார தொடக்க நாளான இன்று காலை மற்றும் மாலை என இருமுறை தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்றம் கண்டு இருப்பது, முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.