தமிழ்நாடு

ரூ.90 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

By Christon
07 Oct 2025, 10:33 AM
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவதால், இதுவரை கண்டிராத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று சவரன் ரூ.89 ஆயிரத்தைத் தொட்ட நிலையில், இன்று மேலும் ரூ.600 உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கடந்த மாதம் 6ஆம் தேதி ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனையான தங்கம், அதன்பிறகு தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த 1-ஆம் தேதி ரூ.87 ஆயிரத்தைக் கடந்த தங்கம், கடந்த 5-ஆம் தேதி வரை மாற்றமின்றி காணப்பட்டது.

தொடர் உச்சம் தொட்ட தங்கம்

நேற்று (அக். 6) ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்வு காணப்பட்டது. காலையில் சவரன் ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.88,480-க்கு விற்பனையானது. மாலையில் மேலும் ரூ.520 உயர்ந்து, முதல் முறையாக சவரன் ரூ.89 ஆயிரத்தைத் தொட்டது. ஒரு கிராம் தங்கம் முதல் முறையாக ரூ.11 ஆயிரத்தையும் கடந்து விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்

இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.167-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள், டாலரின் மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களே இந்தத் தொடர்ச்சியான விலை உயர்வுக்குக் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.