சர்வதேச பொருளாதாரச் சூழல்களுக்கு ஏற்பத் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த 10-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கும், சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, 18-ஆம் தேதி சவரன் ரூ.1,14,320-ஐ எட்டியது.
அதன்பின்னர் நேற்று முன்தினம் காலையில் சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,640-க்கு விற்பனையானாலும், மாலையிலேயே அதிரடியாகச் சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்தது. அந்த விலை உயர்வு நேற்றும் நீடித்து, சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்து ரூ.1,16,800-க்கு விற்பனையானது.
அந்தத் தொடர் உயர்வின் நீட்சியாக இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,710-க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,17,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனையாகி வருகிறது.