Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் யாத்ரி சேவா திவஸ்.. பாரம்பரிய முறையில் பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு!

By VASUKI
16 Sep 2025, 09:38 PM
சென்னை விமான நிலையத்தில் நாளை புதன்கிழமை யாத்ரி சேவா திவஸ் என்ற பெயரில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக, விமான நிலைய இயக்குநர்கள் சி.வி. தீபக் மற்றும் ராஜா கிஷோர் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ளனர்.
பயணிகளை இந்திய பாரம்பரியம் மற்றும் தமிழ் கலாச்சார முறைப்படி வரவேற்பது, குழந்தைகளுக்குத் தேச பக்தியை வளர்க்கும் வகையில் வினாடி வினா போட்டிகள் நடத்துவது, இலவச மருத்துவ முகாம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் இந்த ஒருநாள் விழாவில் நடைபெற உள்ளன. விமான நிலையத்திற்கு வரும் பள்ளி மாணவர்களுக்கு விமானப் பணியாளர்கள், விமானத்துறை வேலை வாய்ப்புகள் குறித்து விளக்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது விமானத்துறையில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

இதற்கிடையில், சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது கட்ட கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், ஒருங்கிணைந்த மூன்றாவது விமான முனையம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் அடுத்த ஆண்டு ஜூன் 30-க்குள் நிறைவடையும் எனவும் இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், சென்னையிலிருந்து சவூதி அரேபியா, நியூயார்க், பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளுக்கு நேரடி விமானங்களை இயக்குவதில் சிக்கல் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து விளக்கம் அளித்த அவர்கள், இந்த வழித்தடங்களுக்குப் போதுமான பயணிகள் இல்லாததால், விமான நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்காகவே, இணைப்பு விமானங்களை இயக்கி, பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் பயணிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளனர். மேலும், மோசமான வானிலை காரணமாக விமானங்கள் தாமதமாவதைத் தவிர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர்