தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு.. அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

By Christon
10 Nov 2025, 02:49 PM
வேலை வாங்கி தருவதாக மோசடி என்ற வழக்கில் முடிவெடுக்கும் வரை அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை விசாரிக்க தடைக்கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், நவம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி வழக்கில், சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

தடை கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனு

இந்த வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவரான செந்தில் பாலாஜியின் உதவியாளர் கார்த்திகேயன் மற்றும் கணேசன் ஆகியோர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், போக்குவரத்துத் துறை மோசடி தொடர்பான வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அந்த வழக்கில் முடிவெடுக்கும் வரை அமலாக்கத்துறை தொடர்ந்த சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை விசாரிக்கக் கூடாது என்றும், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அமலாக்கத்துறைக்குக் கால அவகாசம்

இந்த மனு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இதய சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 11 பேர் நேரில் ஆஜராகியிருந்தனர்.

வழக்கின்போது, சாட்சி விசாரணையைத் தள்ளி வைக்கக் கோரிய மனு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, மனுவுக்குப் பதிலளிக்க அமலாக்கத்துறைக்குக் கால அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை நவம்பர் 24-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.